"வாழ்வாதாரத்துக்கு வழி சொல்லுங்கள்" அரசிடம் கையேந்தி நிற்கும் கலைஞர்கள்..!
தமிழகம் முழுவதும் கோவில் திருவிழாக்களுக்கும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் அரசு தடை விதித்துள்ள நிலையில், அவற்றை நம்பி இருக்கும் நாடகக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கான தீர்வு வேண்டி மாவட்ட நிர்வாகங்களிடம் மனு கொடுத்தனர்.
கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாகி இருப்பதால், மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில் திருவிழாக்களுக்கும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை நம்பி வாழ்க்கையை நடத்தும் நாடகக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
தூத்துக்குடி:
கொரோனா பேரிடர் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கேட்டு தூத்துக்குடி மாவட்ட கிராமியக் கலைஞர்கள் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் மேளதாளத்துடன் வந்து மனு அளித்தனர். தற்போது வழங்கப்பட்டு வரும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் அனைத்துக் கலைஞர்களுக்கும் சரிவரக் கிடைப்பதில்லை என்றும் நிவாரணத் தொகையை உயர்த்தி, அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை:
நெல்லையில் கொரோனா பேரிடர் நிதியாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டல அனைத்து கலைச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மேளதாளம் முழங்க கரகாட்டம் ஆடியவாறு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கரூர்:
கரூர் நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளங்களுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நிவாரண நிதியாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த நாடகக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் பூண்டு, பாட்டுப்பாடியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் ரயில் நிலையம் முன்பு கூடிய அனைத்து வகை கலைஞர்கள், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது ஒதுக்கி நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்:
மேடை நாடகங்களை உரிய தனிநபர் இடைவெளியுடன் நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும், அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட அனைத்துவகை கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கட்டுப்பாடுகளோடு கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் அல்லது மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனக் கேட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், கரகாட்டம் ஆடியும் பாட்டுப் பாடியும் கலைஞர்கள் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி:
தங்களுக்கு அரசின் நிவாரணம் வேண்டாம், மாறாக கட்டுப்பாடுகளோடு கலைநிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள அனுமதி கொடுங்கள் எனக் கேட்டு கன்னியாகுமரி மாவட்ட அனைத்து வகைக் கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Comments